News Article

தமிழர் பொது வேட்பாளர் தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கும் வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என்று தமிழ்க் கட்சியினரும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிப்படுத்தும் வகையிலும் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இதற்குப் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூகத்தினருக்கும் இடையில் முதலாவதாக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வாறு இரு தரப்பினர்களுக்கும் இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Comment