News Article

வடக்கு மாகாணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வாக்குப் பதிவுகள்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை மக்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. முல்லைத்தீவு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர். அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

Leave a Comment