News Article

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (14.11.2024) ஆரம்பமாகியுள்ளது. மக்கள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தமது வாக்குகளைச் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக நாடு முழுவதும் 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இன்றையதினமும் தமது உப தபால் நிலையத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெற முடியும். வாக்காளிப்பதற்கு வாக்காளர் அட்டை அவசியமில்லை. எனினும், வாக்காளர் அட்டையை கொண்டு செல்வது வாக்களிப்பதற்கு இலகுவாக அமையும். இதேநேரம், வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தத் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது ஆட்பதிவு திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டு செல்லுதல் கட்டாயமானது. தேர்தலுக்காகப் பொலிஸார், முப்படையினர், விசேட அதிரடிப் படையினர் என 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். இதற்காக இன்றைய தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் 5 ஆயிரத்து 464 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 357 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 19 நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment